மார்க்கஸ் விட்ருவியஸ் பொல்லியோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொதுவாக விட்ருவியஸ் என்று அழைக்கப்படும் மார்க்கஸ் விட்ருவியஸ் பொல்லியோ, ஒரு ரோமானிய எழுத்தாளரும், கட்டிடக்கலைஞரும், பொறியியலாளருமாவார். இவர் கி.மு முதலாவது நூற்றாண்டளவில் வாழ்ந்தவர். ஆரம்பத்தில் ரோமானியச் சக்கரவர்த்தியான ஜூலியஸ் சீசருக்குக் கீழும், பின்னர் முதலாம் அகஸ்டசுக்குக் கீழும் பொறியியலாளராகப் பணியாற்றினார். பணியிலிருந்து இளைப்பாறிய பின் 10 தொகுதிகளைக் கொண்ட கட்டிடக்கலை பற்றிய தனது நூலை எழுதினார். இதுவே இன்று கிடைக்கக் கூடிய காலத்தால் முற்பட்ட கட்டிடக்கலை நூலாகக் கருதப்படுகிறது.
அன்றைய ஆர்க்கிடெக்சர் (கட்டிடக்கலை என்பது இன்றைய பொருள்) என்ற துறையினுள், கட்டிடக்கலை, நகர அமைப்பு, நிலத்தோற்ற அமைப்பு (Landscape), துறைமுகங்கள், கடிகாரம், நீர்காவி அமைப்புகள் (Aquaducts), பம்பிகள், இயந்திரங்கள் எனப் பலவகையான விடயங்களும் அடங்கியிருந்ததனாற் போலும், இவர் எழுதிய புத்தகம் மேற்படி எல்லா விடயங்களையும் எடுத்தாள்கிறது.இவற்றைவிட இசை, மருத்துவம் போன்ற விடயங்கள் பற்றியும் இப்புத்தகத்தில் குறிப்புகள் உள்ளன.
இவர் ஒரு புகழ் பெற்ற கட்டிடக்கலைஞராகவும், அவர்காலத்தின் அறிவுத்துறைகளிலும், தொழில்நுட்பத்திலும், பரந்த புலமையுள்ளவராகவும் போற்றப்படுகின்ற அதேவேளை, இவர் தன் காலத்துக்கு முந்தியகாலத்து விடயங்கள் பற்றியே சிலாகித்து எழுதியுள்ளாரென்றும், பழமைவாதியாக விளங்கினாரென்றும் இவரைக் குற்றம் சாட்டுபவர்களும் உள்ளனர். மனித சமுதாயத்துக்குப் புதிதாக எதையும் இவர் வழங்கவில்லை என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

